Tuesday, August 24, 2010

திருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்!.......பாலியல் தொழில்: சட்டத்தை மீறுகின்ற குற்றம்!

திருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்!


பாலியல் தொழில்: சட்டத்தை மீறுகின்ற குற்றம்!


நமது (உலக) மனித சமூகங்களில் பெண்கள் அடக்கப்படுவதும் பொருளாதார மற்றும் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. ஏனனில் ஆண்கள் அவர்களது சமூக நிறுவனங்கள் என்பன மனிதர்கள் தொடர்பாக தீர்மானிக்கும் உறவுகள் சமூகப் பாத்திரங்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் என அனைத்தும் ஆண்களின் நலத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் அவர்களே அவர்களது அதிகாரத்தின் மூலம் தீர்மானிக்கின்றன(ர்) என மார்லின் பிரை (Marilyn Frye) என்ற பெண்ணிய சிந்தனையாளர் குறிப்பிடுகின்றார். ஆகவேதான் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொன்றும் ஆண்களின் நலன்களை மையப்படுத்துவதாகவும் திருப்திப்படுத்துவதாகவும் இருக்கின்றன எனக் கூறுகின்றார். இந்தடிப்படையில் பாலியல் தொழில் என்பது ஆண்களின் பாலியல் தேவைகளை அதாவது அவர்களது காமம் அடக்கப்பட்டதன் விளைவாக உருவான பாலியல் தொடர்பான அதீத கற்பனைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமானதல்ல என அவர் மேலும் குறிப்பிடுகின்றார். பாலியல் தொழிலுக்கு நீண்ட கால வரலாறு இருந்தபோதும் இன்று இத் தொழிலானது சர்வதேச அளவில் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளதுடன் வளர்ந்துவருகின்ற முக்கியமான ஒரு தொழிலாக இருக்கின்றது. அதேவேளை இத் தொழிலின் வளர்ச்சியினால் பல்வேறு பிரச்சனைகளும் உருவாகியுள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பெருமளவில் கடத்தல், இத் தொழில் புரிபவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பாலியல் தூஸ்பிரயோகங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் சமூக அந்தஸ்து என்பவை இல்லைமையும், அவர்களுக்கான உரிமைகள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றமையும் என்பன முக்கியமான பிரச்சனைகளாக உள்ளன. ஆகவே பாலியல்; தொழில் என்பது இலகுவாக புறந்தள்ளக் கூடியதோ அல்லது சமூகத்திலிருந்து இல்லாமல் செய்யக் கூடியதோ அல்ல. மாறாக இப் பிரச்சனைகளுக்கு எவ்வாறு நாம் முகம் கொடுக்கப்போகின்றோம் என்பதும் அதை எவ்வாறு புரிந்துகொள்கின்றோம் என்பதுமே முக்கியமானது.



ஸ்டெலா விக்டரின் “பாலியல் தொழில்: தொழிலா அல்லது பெண்கள் மீதான வன்முறையா?” என்ற இனியொரு சஞ்சிகையில் வெளிவந்த பாலியற் தொழில் தொடர்பான கட்டுரையே (http://inioru.com/?p=16281&cpage=1#comment-12898) இக் கட்டுரையை எழுதத்துண்டியது. மேற்குறிப்பிட்ட கட்டுரை இலங்கைச் சுழலை மையப்படுத்தியயும் வர்க்க நிலை, பொருளாதார நிலை, பாலியல் வியாபாரம் மற்றும் வறுமை என்ற காரணங்களால் இத் தொழிலுக்கு பெண்கள செல்லத் தள்ளப்படுகின்றனர் என்றவகையில் எழுதப்பட்டிருக்கின்றது. மேலும் இத் தொழிலானது பெண்களுக்கு எதிரானது என்பதாலும் அவர்களது வளர்ச்சிக்கு உதவ இல்லை என்பதாலும எவ்வாறு இதை சமூகத்திலிருந்து நீக்குவது என்பது தொடர்பான கேள்வியை எழுப்புவதுடன் கட்டுரையை நிறைவு செய்கின்றார் கட்டுரையாளர். இக் கட்டுரை சில கேள்விகளை எனக்குள் எழுப்பியதால் இக் கட்டுரையை எழுதுகின்றேன்.



பாலியல் தொழிலானது சமூகத்தில் சதாரண தொழில்களைவிட கீழ் தரமான மூன்றாம் தர தொழிலாளகவே பார்க்கப்படுகின்றது. பெயர் பெற்ற (பிரபல்யமான, தீவிரமான, முற்போக்கு) தமிழ் எழுத்தாளர்கள் கூட பலியல் தொழிலாளர்களை, “விபச்சாரி, வேசி” என மிக சாதாரணமாகவும் இழக்காரமாகவும் ஆணாதிக்க சொற்களைப் பயன்படுத்தி அழைப்பதுடன் தம் கட்டுரைகளில் கதைகளில் எழுதியும் செல்கின்றனர். இது ஆணாதிக்க சமூகத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் ஒன்று என்றால் மிகையல்ல. ஏனனில் மறைமுக அல்லது இரகசிய வெளிகளில் தாம் பயன்படுத்தம் ஒன்றை பரந்த பொது வெளிகளில் இகழ்வதும் புறக்கணிப்பதும் மனிதர்களின் குறிப்பாக ஆண்களின் சாதாரண செயலாகின்றது. ஆகவே பாலியல் தொழில் தொடர்பான ஒரு விரிவான ஆழமான பார்வையை பார்ப்பதே நமது கடந்த கால ஆணாதிக்க சிந்தனையைக் கடந்து செல்வதற்கும் பாலியல் தொழில் மற்றும் அத் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கும் வழிவகுக்கும். ஏனனில் இத் தொழிலாளர்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களான நடைமுறை வாழ்க்கை, குடும்பம், வேலை, பொது இடம், காவற்துறை, சட்டம் என பல்வேறு இடங்கிளலும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பல. ஆகவே, பெண்களைப் பற்றியும் மற்றும் அவர்கள் ஈடுபடு(த்தப்படு)கின்ற பாலியல் தொழில் தொடர்பாக நாம் விரிவான பன்முகப் பார்வையை கொண்டிருப்பதுவே இவை தொடர்பான பிரச்சனையை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அதற்கான தீர்வை காணவும் முன்வைக்கவும் உதவிபுரியும் என நம்புகின்றேன்.





நம் உடலின் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டு நாம் ஒவ்வொரு வேலைகளை பணத்திற்காகவோ சமூக சேவையாகவோ செய்கின்றோம். ஆனால் பால் உறுப்புக்களைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகள் தொடர்பாக நமக்கு எதிர் மனநிலையும் அதை ஏற்க மறுக்கின்ற தன்மையும் இருக்கின்றது. இவ்வாறான ஒரு மன நிலைக்கான காரணத்தை நாம் அறியவேண்டும்? பாலியல் தொழிலை பிறதொழில்கள் போல ஒரு தொழிலாக ஏற்பதற்கு நாம் ஏன் தயங்குகின்றோம்? இதில் ஈடுபடும் தொழிலாளாகளை நாம் ஏன் மதிப்பதில்லை? மேலும் இவ்வாறான தொழில்களுக்கு தொழில் அந்தஸ்து சட்ட ரீதியான அங்கீகாரம் ஏன் கிடைப்பதில்லை? அவ்வாறு கிடைக்காததினால் எவ்வாறான பிரச்சனைகளை பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றார்கள்? என்பன தொடர்பாக நாம் சிந்திக்கவேண்டி உள்ளோம். மறுபுறம் பாலியல் தொழிலாளர்கள் முக்கியமான ஒரு இடத்தைப் நாம் வாழ்கின்றன சமூகங்களில் பிடித்திருப்பது மட்டுமல்ல தமது உரிமைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தேசம் நாடு சர்வதேசம் என்றளவில் அமைப்பு ரீதியாகவும் ஒன்றினைந்துள்ளதுடன் அதற்கான போரட்டங்களையும் முன்னெடுக்கின்றனர். ஆகவே இது அடிப்படையில் ஒரு தொழிலாளர் பிரச்சனையாக குறிப்பா பெண்களை அதிகமாக் கொண்ட ஒரு தொழிலாளர் பிரச்சனையாக பார்க்கும் பொழுதே நாம் சரியான ஒரு கண்ணோட்டதை முன்வைப்பதுடன் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளைக் காணலாம். அப்பொழுதுதான் சமூக மாற்றத்திற்கான பாதையில் இவர்களையும் இனைத்துச் செல்லலாம். ஆகவே பெண்களின் பாலியலுறவும் குடும்பமும், பாலியல் தொடர்பான சிந்தனையும் சமூகமும், பாலியல் தொழிலும் சமூக ஆணாதிக்க சட்டமும் என பல பிரிவுகளில் இதை நாம் ஆராய வேண்டியுள்ளது.





ஒரு இடைக் குறிப்பு. அதாவது மனிதர்களின் பாலியல் உணர்வுகள் மற்றும் ஆண்கள் பெண்கள் என இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். நாம் வாழுகின்ற சமூகங்கள் ஆண் பெண் என்ற அடையாளங்களை அதற்கான வரைவிலக்கனங்களை மிகவும் இலட்சியத்தனமாகவே தீர்மானித்துள்ளன. அதுமட்டுமல்ல இவை ஒரு நேர்கோட்டின் எதிர் எதிர் முனைகளில் இருக்கின்ற மனித அடையாளங்களும் தன்மைகளுமாகும். அதாவது யதார்த்தத்திற்கு முற்றிலும் முரணானவை. ஏனனில் மனிதர்கள் எனப்படுபவர்கள் இந்த இரு அந்தக்களுக்கும் இடையில் வாழ்கின்ற பல்வேறுவிதமான பால் மற்றும் பாலியல் தன்மைகளையும் அடையாளங்களையும் கலவையாக கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் சமூகத்தில் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஆண் பெண் என இரு பால்களுக்கு இடையிலான பிரச்சனையாகவே நாம் வாழ்கின்ற சமூகங்களில் பொதுவாக பார்க்கப்படுகின்றது. மேலும் பொதுவாக ஆண்கள் அடக்குகின்றவர்களாகவும் பெண்கள் அடக்கப்படுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆகவே இக் கட்டுரையில தொடர்ந்தும் ஆண் பெண் என்றே குறிப்பிடுகின்றேன். இதன் அர்த்தம் இந்த ஆண் பெண் என்ற வரையறைகளை நான் ஏற்கின்றேன் என்பதல்ல. ஆகவே மனிதர்களின் பால் மற்றும் பாலியல் தொடர்பான பன்முகத்தன்மை தொடர்பான பிரக்ஞையை இக் கட்டுரை வாசிக்கும் பொழுது தங்கள் பிரக்ஞையில் கொண்டிருக்;கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.





பெண்களுக்கும் பாலியல் தொழிலுக்கும் இடையலான உறவுகளும் முரண்பாடுகளும் பிரச்சனைகளும் அந்தந்த நாடுகளின் பண்பாடு கலாசராங்களுக்கு ஏற்ப தனித்துவமாக இருந்தபோதும் அடிப்படையில் உலகளவில் இது பொதுவான ஒரு பிரச்சனையே. ஏனனில் நாம் தனித்தனி நாடுகளாக தேசங்களாகப் பிளவுபட்டிருந்தபோதும் ஒவ்வொரு நாடுகளிலும் தேசங்களிலும் உள்ள சமூகங்கள் பெரும்பாலும் ஆணாதிக்க கட்டமைப்புக்கும் சட்டதிட்டங்களுக்கும் சிந்தனைக்கு உட்பட்டு ஆட்பட்டே இருக்கின்றன. இந்தடிப்படையில் பாலியல் தொழில் தொடர்பாக நான் வாசித்த, அறிந்த பெண்ணிய எழுத்தாளர்களின் கருத்துக்களையும் நான் சேகரித்த விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரையை எழுதுகின்றேன். மேலும் பாலியல் தொழிலாளியாக இருந்துகொண்டு இத் தொழில் செய்பவர்களின் நன்மைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் செயற்படுகின்ற ஒரு கனடிய அமைப்பின் ஒருங்கினைப்பாளராகவும் இருக்கின்ற ஒரு சமூக சேவகி ஒழுங்கமைத்த பாலியல் தொழிலும் சட்டமும் என்ற கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் இங்கு உள்ளடக்குகின்றேன். இந்தக் கருத்தரங்கில் ஒரு பாலியல் தொழிலாளியை “விபச்சாரி, வேசி” என்ற ஆணாதிக்க கண்ணோட்டத்தில் பார்க்காது முதல்முறையாக ஒரு சமூக சேவகியாக பார்த்தேன் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.





உலக சமூகங்களில் பெரும்பாலும் ஆண்கள் அடக்குமுறையாளர்களாகவும் பெண்கள் அடக்கப்படுகின்றவர்களாகவும் இருப்பதற்கு ஒரு காரணம், ஆண்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும் பலம் வாய்ந்தவர்களாகவும் பெண்கள் பலவீனமானவர்களாகவும் அமைதியானவர்களாகவும் தங்கியிருப்பவர்களாகவும் ஆணாதிக்க சமூகங்களால் காலம் காலமாக கட்டமைக்கப்பட்டுவந்த கருத்து மேலாதிக்கமும் அதனடிப்படையில் உருவான நம்பிக்கைகளுமே என்றால் மிகையல்ல. இந்த நம்பிக்கைகள் இன்றுவரை அனைத்து சமூகங்களாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதாரண விடயமாகவே இருக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் குறிப்பாக புலிகளின் காலத்தில் பெண்களின் ஆயுத செயற்பாடுகள், அளவுக்கு அதிகமான இழப்புகளை கொடுத்தே, இவ்வாறனா சமூக நம்பிக்கைகளை சிதறடித்தன. பெண்கள் அனைத்து விடயங்களிலும் ஆண்களுக்கு சரிநிகரானவர்களாகவே இருக்கின்றோம் என தமது இழப்புகளினுடாக வாழ்ந்து நிறுபித்துள்ளனர். ஆனால் மேற்குறிப்பிட்ட சுழலில் பெண்களின் விடுதலை சுதந்தரம் என்பதற்கு மாறாக, வெறும் படையணிகளங்களுக்கான மனித எண்ணிக்கையாக மட்டுமா பயன்படுத்தப்பட்டார்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதும் சிந்தனைக்கும் விமர்சனத்திற்கும் உரிய ஒரு விடயம் ஆகும்.



ஏனனில் இதேபோல் உதராணமாக 40களில் மேலைத்தேய நாடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு ஊந்துதலாக இருந்தது பெண்ணிய போராட்டமல்ல. மாறாக அன்று பெரும்பான்மையான ஆண்கள் போரில் ஈடுபட்டதால் உழைப்புச் சக்திக்கு குறிப்பாக போர் தளபாடங்களை உற்பத்தி செய்வதற்கு மனித வலு தேவைப்பட்டது. இதனால்தான் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஆணாதிக்க சமூகத்தால் தமது போர்க் கால செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர் என பெண்ணிய வாதிகள் கூறுவதை நாம் கவனிப்பது நல்லது. அதாவது ஆண்கள் தமது தேவைகளுக்கு ஏற்ப காலத்துக்கு காலம் பல்வேறு விதங்களில் பெண்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள். இவ்வாறு ஆட்பற்றாக்குறை காரணமாக குடும்ப உழைப்புச் சக்தியுடன் உற்பத்தி உழைப்புச் சக்தியாகவும் பயன்படுத்தியமை பெண்களைப் பொருத்தவரை சாதாகமான சுழலையே உருவாக்கியது. ஏனனில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான சந்தர்ப்பமும், ஆண்களுக்கு நிகராக சகல தளங்களிலும், துறைகளிலும் தமக்கும் வேலை செய்வதற்கான ஆற்றல் இருக்கின்றது என்பதை நிறுபிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் இது வழங்கியது. மறுபுறம் இது புதிய பல பிரச்சனைகளை உருவாக்கியது. இதன் விளைவாக உருவான பெண்களின் போராட்டங்கள் மூலம் புதிய சட்டங்களையும் குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு தளங்களில் ஏற்படுத்த வித்திட்டது. உதாரணமாக பெண்களை தமது வீடுகளிலும் வேலைத்தளங்களிலும் சமத்துவமாக நடத்துவதும் சமூகத்தில் உற்பத்தித் துறையிலும் சம வாய்ப்புகளும் உரிமைகளும் சலுகைகளும் பாதுகாப்பும் அளிக்க வேண்டி வகையில் சட்டங்களை காலமாற்றத்திற்கு ஏற்ப, ஆணாதிக்க சமூகம் உருவாக்கவேண்டி ஏற்பட்டது.



இதுபோன்று காமம் மற்றும் பாலியல் தொடர்பாக சிந்திக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என காலி ருபன் (Galle Rubin) என்ற பேராசிரியர் குறிப்பிடுவது ஒரு உண்மையான கூற்றாகின்றது. ஏனனில் ஆண்களின் பாலியல் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பாலியல் தொழிலானது காமம், பாலியல், பாலியல் தொழில், மற்றும் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்கள், அவை உருவாக்கிய பிரச்சனைகள் மற்றும் முரண்பாடுகள் என்பன தொடர்பாகவும் புதிதாக சிந்திக்வேண்டிய நிலைக்கு அல்லது நிர்ப்பந்தத்திற்கு இன்று சமூகம் வந்துள்ளது. ஒருபுறம் பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் இந்த சிந்தனை வழிவகுப்பதுடன் காமம், பாலியல் போன்றன தொடர்பான சிந்தனைகளிலும் புதிய வளர்ச்சியை உருவாக்குவதற்கு வித்திடுகின்றது. அதாவது பாலியல் தொழிலானது இன்று பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் என்பவற்றுடன், ஒரு மனிதரின் பாலியல் உரிமை, சுதந்திரம், தெரிவு போன்ற சட்டங்களை உருவாக்குவதற்கும் அவர்களுக்கான உரிமைகளை மதிப்பதற்கும் வழி ஏற்படுத்தியுள்ளது. இப் பாலியல் தொழிலில் குறிப்பாக பெண்களே பெரும்பாலும் ஈடுபடு(த்தப்படு)கின்றனர். ஆகவே சமூகத்தில் பெண்களின் நிலை தொடர்பாக பார்ப்பது தவிர்க்கமுடியாததாக இருக்கின்றது.



பெண் தொடர்பான சமூகத்தின் இன்னுமொரு பார்வையும் கவனத்திற்குரியது. அதாவது பெண் என்பவள் ஒரு பாலியல் பண்டமாகவே திருமணம் குடும்பம் வீடு வேலைதளம், சமூகம் என அனைத்து தளங்களிலும் அமைப்புகளுக்குள்ளும் வெளிகளிலும் பார்க்கப்படுகின்றாள். இத்துடன் பெண்களை பொருட்களாவும் அவர்களது மனவளர்ச்சி, சமூக மற்றும் மனித அந்தஸ்து என்பன ஆண்களைவிட தாழ்ந்த தரம் கொண்டவர்களாகவும் பார்க்க காரணமாகின்றது. இதனடிப்படையிலையே பெண்களது வேலைகள், பால், பாலியல், பால்தன்மை என்பனவும் ஆணாதிக்க சமூகத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது ஆண்களின் அதிகாரத்துவ பார்வை பெண்களை இவ்வாறுதான் பார்க்கின்றது எனவும் இது ஆண்களின் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றது எனவும் பெல் ஊக்ஸ் (bell hooks) என்ற பெண்ணியவாதி குறிபிடுகின்றார். இதைத்தான் பிரான்ஸ் பெண்ணியவாதி சிமோன் டீ பிவோர் (Simone De Beauvoir), பெண்கள் சுய ஆற்றலும் தகுதியும் உள்ளவர்களாக ஏற்றுக்கொள்வதற்கு அல்லது புரிந்துகொள்வதற்கு மாறாக ஆண்களுடன் தொடர்புடுத்தி உப மனிதர்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளனர் என தனது “இரண்டாவது பால்” (The second sex ) என்ற புத்தகத்தில் கூறுகின்றார். பெண்களைப் பற்றிய இவ்வாறன பார்வைகளானது பெண்களது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுடன் அவர்களை அடிமைப்படுத்தவும் பல்வேறு வழிகளில் சுரண்டவும் வழிவகுக்கின்றது. இதன் காரணமாகத்தான் பெண்கள் வேலையில்லாமை, வறுமை, ஆண்களில் தங்கியிருத்தல் என வாழ்க்கையின் பல்வேறுவிதமான கஸ்டங்களுக்கு முகம் கொடுக்கவும் அனுபவிக்கவும் வேண்டியுள்ளது என மேலும் கூறுகின்றார். குறிப்பாக இவ்வாறான பெண்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமாக இருக்கின்றமையினால் வசதியாக கிடைக்கக் கூடிய பாலியல் தொழிலுக்குள் அகப்பட்டுவிடுகின்றனர் என்கின்றார். மறுபுறம் ஆணாதிக்க சமூக அமைப்புக்குள் பாலியல் தொழிலுக்கான தேவை இருக்கும் பொழுது பெண்கள் அத் தொழிலுக்கு செல்கின்றனர் என பிவோரும் (Simone Beauvoir) இன்றைய பெண் சிந்தனையாளரான யூடித் பட்லரும் (Judith Butler) வாதிடுகின்றனர். இவற்றைவிட பாலியல் துன்புறுத்தல்கள் அவதுறுகள் கடத்தல் வியாபாரங்களும் பெண்கள் இத் தொழிலில் ஈடுபடுவதற்கு காரணமாக இருக்கின்றன என இவர்கள் இருவரும் கூறுகின்றனர்.



மேலும் தமக்கு கிடைக்கும் தொடர்புகள் உதராணமாக காதலர்கள் நண்பர்கள் மூலமாகவும் இத் தொழிலுக்கு அறிமுகமாகின்றனர். சில பெண்கள் சமூகம் மதிக்கும் சில தொழில்களை செய்து கொண்டு மேலதிக வருமானத்திற்காக இத் தொழிலில் பகுதிநேரமாக ஈடுபடுகின்றவர்களும் உள்ளனர். அதாவது இத் தொழில் ஈடுபடும் பல பெண்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் உயர் அல்லது நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன் தமது சுய விருப்புடனே இத் தொழல் ஈடுபடுகின்றனர் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றைவிட பாலியல் தொழிலானது இன்று சர்வதேச ரீதியாக வளர்ந்து இருக்கின்ற அல்லது வளர்ந்து வருகின்ற மிக்பெரிய நிறுவனமயப்பட்ட ஒரு தொழிலாக உள்ளது. இதனால் பல பெண்கள் வறிய நாடுகளிலிருந்து கடத்தப்படுகின்றமையும் அதேவேளை இவ்வாறான மனிதக் கடத்தல்களும் முக்கியமான ஒரு தொழிலாக பாலியல் தொழிலின் ஒரு பகுதியாக இருக்கின்றது. உதாரணமாக பாலியல் தொழிலுக்காக வளராத அல்லது வளர்கின்ற நாடுகளிலிருந்து பொருளாரா வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வருடந்தோறும் 2 மில்லியன் பெண்கள் என ஐக்கியநாடுகள் சபையும் அல்லது 4 மில்லியன் பெண்களும் சிறுவர்களும் கொண்டுவரப்படுகின்றன என வேறு பல ஆய்வுகளும் அறிவிக்கின்றன. இதைத் தவிர போர் நடக்கும் இடங்களில் இராணுவத்தினருக்கு ஆறுதலும் இன்பமும் அளிக்கும் வகையில் திட்டமிட்டவகையில் பாலியல் தொழிலாளர்களை ஒரு தொழில் நிறுவனமாக ஆட்சியாளர்கள் பயன்டுத்தப்படுவதும் ஒரு வரலாறாக இன்று வரை இருக்கின்றது. ஆகவே பாலியல் தொழிலில் ஒருவர் ஈடுபடுவதற்கு பல சமூகக் காரணங்கள் இருக்கின்றன.



சமூகம் கட்டமைத்த காமம், பால், பால் தன்மை பால் அடையாளங்கள் போன்ற அறிவும் இது தொடர்பான நமது அறிவின்மையுமே பாலியல் தொழில் உருவாவதற்கான இன்னுமொரு காரணம் என்றால் மிகையல்ல. காமம் மற்றும் பாலியல் என்பவற்றுடன் தொடர்புபட்ட கலாசார பண்புகளான கற்பு போன்ற சமூக அடக்குமுறைகள் மனிதர்களது குறிப்பாக பெண்களது காம உணர்வுகளை ஒடுக்கும் அதேவேளை அவர்களை சுதந்திரமாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடவோ காம இன்பத்தை அனுபவிக்கவோ விடுவதில்லை. இதனால் பெண்கள் தமது காம மற்றும் பாலியல் உணர்வுகளை அனுபவிப்பதோ திருப்தி செய்வதோ இல்லை. மேலும் தாம் உறவுகொள்ளும் “தமது” ஆண்களின் பாலியல் உணர்வுகளையும் திருப்தி செய்வதில்லை. மறுபுறம் குறிப்பாக பெண்களின் காம உணர்வு மற்றும் அனுபவம் தொடர்பான அறிவுகளும் வெளிப்படுத்தப்படாமல் அடையாளங் காணப்படாது அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்துள்ளன என அன்றே லோட் (Audre Lorde) கூறுகின்றார். ஆகவே தான் இந்த வரையறுக்கப்பட்ட அறிவானது ஆண்களால் தவறாக பயன்படுத்துவதற்கும் அவர்களது பார்வையிலமைந்த பாலியல் தொடர்பான (நீலப்)படங்கள் உருவாக்குவதற்கும் அடிப்படையாக இருக்கின்ற என அவர் மேலும் கூறுகின்றார். ஆண்களின் காமம், பாலியல் தொடர்பான தவறான அறிவும் பார்வையும் பாலியல் ரீதியான படங்களுடனான அதிகமான ஈடுபாடும் என்பவையுமே குடுப்பம், திருமணம், பாலியல் தொழில் நடைபெறும் இடங்கள் போன்ற நிறுவனங்களுக்குள் பெண்கள் மனைவிகளாகவும் பாலியல் தொழிலாளர்களாகவும் முகம் கொடுக்கும் பாலியல் சுரண்டல்களுக்கும் அனுபவிக்கும் கஸ்டங்களுக்கும் காரணமாக இருக்கின்றன.



நமது சமூகங்கள் மனிதர்களின் காம மற்றும் பாலியல் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் உறவுகளுக்கும் பல கட்டுப்பாடுகளை உருவாக்கி அவற்றை அடக்கி வந்துள்ளன. இக் கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்களையே அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. இதனால் தான் பெண்கள் பாலியல் சுகமாக எதைத் தருகின்றார்களோ அதை மட்டுமே ஆண்கள் பெறலாம் எனவும் மறுபுறம் பெண்கள் தாம் விரும்பும் பாலியல் சுகத்தைப் பெற முடியாதும் உள்ளனர் எனவும் கூறுகின்றார் சிமோன் பீவோர் (Simone Beauvoir). இவ்வாறனா சமூக நம்பிக்கைகள், கட்டுபாடுகள் மற்றும் அதிகாரத்துவ போக்குகள் காரணமாக ஆண்கள் கூட “தமது” பெண்களை பாலியல் ரீதியாக திருப்தி செய்யமுடியாதவர்களாக இருப்பது மட்டுமல்ல “தமது” பெண்களிடமிருந்தும் பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் தாம் பெற முடியாத காம பாலியல் திருப்தியின்மைக்கு பெண்களை மட்டுமே காரணமாக ஆண்கள் கூறுவர். இது தொடர்பான தமது அறிவின்மையும் மற்றும் ஒரு உறவில் ஈடுபடும் பொழுது தமது அதிகாரத்துவ, ஆக்கிரமிப்பு, வன்முறை போன்ற தன்மைகள் கொண்ட தமது பண்புகளையும் செயற்பாடுகளையும் வசதியாக ஆண்கள் மறந்துவிடுகின்றனர். அல்லது இது தொடர்பான பிரக்ஞையற்று இருக்கின்றனர்.




இதனால் தான் திருமண பந்தத்திற்குள் ஒரு ஆணோ பெண்ணோ தனது காம பாலியல் சுகத்தை பெற முடியாதவராக இருக்கின்றார்கள். இதன் விளைவாக, ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டபோதும் ஆண்களுக்கு ஆணாதிக்க சமூகத்திலிருக்கின்ற சுதந்திரம் மற்றும் அதிகாரம் பலம் சலுகைகள் என்பனவற்றால் இக் கட்டுப்பாடுகளை மீறுவதற்கு முடிகின்றது. ஆகவே அவர்கள் வெளியில் சென்று பாலியல் தொழலாளர்களிடம் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் வாய்பளிக்கின்றது. அவ்வாறு ஆண்கள் மீறும் பொழுது அதற்கான பாதுகாப்பும் கிடைக்கின்றது. ஆகவே பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான தேவை உருவாக்கப்படுகின்றது. ஆனால் பெண்கள் இவ்வாறு தமது பாலியல் தேவைகளை ஆசைகளை கனவுகளை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவே பெண்கள் தமது பாலியல் தேவைகளை ஆசைகளை கனவுகளை மேலும் மேலும் ஓடுக்கியே வாழவேண்டியுள்ளது. ஆனால் பெண்கள் சமூக கட்டுப்பாடுகளை மீறும் பொழுது பல பிரச்சனைகள் உருவாவதும் “விபச்சாரி வேசி” என்ற பட்டத்தையும் சமூகத்தில் பெறுகின்றார்கள். இதன் விளைவாக அவர்கள் பாலியல் தொழிலுக்கு இலகுவாக தள்ளப்படுவதற்கான சந்தர்ப்பமும் உருவாக்கப்படுகின்றது. ஏனனில் திருணம பந்தத்திற்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இருபால் ஒருதரா உறவு முறைக்கே அதிக முக்கியத்துவத்தை பல்வேறு ஆணாதிக்க சமூகங்களும் கொடுக்கிகின்றன. இவ்வாறான ஒரு உறவுக்கே சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்து மற்றும் சலுகைகளும் பாதுகாப்பும் உள்ளது. ஏனனில் மார்லின் பிரை (Marilyn Frye) குறிப்பிடுவதுபோன்று இருபால் ஒருதரா திருமண உறவு முறை என்பது ஆண்களிடம் அதிகாரத்தை கொண்ட ஆண்களுக்காக ஆணாதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவன வடிவம் என்கின்றார். ஆனால் இந்த ஒரு தார உறவு முறையே பாலியல் தொழிலுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என நம்பப்படுகின்றது. ஆகவே இதுபோன்றே பாலியல் தொழிலும் தந்தைவழி ஆணாதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்டுகின்ற சமூக அமைப்பு நிறுவனங்களில் ஒன்று எனக் கூறலாம்.



சிமோன் பிவோரின் (Simone Beauvoir) புத்தம் வெளிவந்தது 1948 ம் ஆண்டு. அன்று இருந்ததைவிட இன்றைய பெண்களின் நிலைமேலானதாகவே இருக்கின்றது எனக் கூறலாம். ஆனாலும் ஆணாதிக்க சமூக மேலாதிக்கம் மட்டும் அப்படியே மாறாமல் இன்றும் இருக்கின்றது என்றால் பொய்யல்ல. உதாரணமாக குடும்ப முறைமைக்குள் இன்றும் பெண்கள் இனப் பெருக்க உற்பத்தி சாதனங்களாகவும் குழந்தை மற்றும் வீடு பாராமரிப்பவர்களாகவுமே பார்க்கவும் எதிர்பார்க்கவும் படுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக திருமண முறைமைக்குள் ஆணின் பாலியல் தேவைகளை ஆண் எதிர்பார்க்கும் எந்த நேரத்திலும் அவள் பூர்த்தி செய்யவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றாள். இவை எல்லாம் எழுதாத சட்டங்களாகவே இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் ஆண்களின் சிந்தனை என்பது பெண்களை பண்டங்காள பார்ப்பதிலிருந்து அன்றிலிருந்து இன்றுவரை மாறவே இல்லை எனக் கூறலாம். அதாவது ஆணாதிக்க சமூகத்தில் அதன் அடிப்படையில் அமைந்த திருமண பந்தம் என்பதும் ஒரு வகையில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலே என்றால் மிகையல்ல. அதாவது திருமணமான பெண் என்பவள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளி. அதுவும் தான் வழங்கும் உழைப்புக்கு ஊதியம் பெறாது ஒரு சேவையாக இலவசமாகவே செய்கின்றாள். மறுபுறம் இது அவளது கட்டாயப்படுத்தப்பட்ட சமூக குடும்ப கடமையாகவும் இருக்கின்றது. இதனால் தான் குடும்ப திருமண அமைப்புக்குள் பெண்ணால் செய்யப்படுகின்ற வேலைகள் மதிக்கப்படுவது மட்டுமில்லை பெறுமதியில்லாதுமிருக்கின்றது. இது வெளிப்படையான ஒரு பாலியல் மற்றும் பொருளாதரா சுரண்டலே என்றால் மிகையல்ல. இதற்கு காரணம் பெண்கள் ஆண்களைவிட குறைந்த அதாவது உப மனித கூறுகளாகப் பார்கப்படுவதே காரணம். இதற்கு சுமதிரூபனின் “மனுசி” (http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A) என்ற குறுந்திரைப்படமும் “ரெணிகுண்டா” என்ற வியாபாரரீதியான திரைப்படமும் அண்மையில் பார்த்த நல்ல உதாரணங்களாக இருக்கின்றது. இவ்வாறு இருந்தபோதும் ஒரு ஆணால் அவனது சமூக கட்டுப்பாடுகளாலும் அடக்குமுறைகளாலும் தனது காம பாலியல் ஆசைகளை கனவுகளை திருணம பந்தத்திற்குள் பூரணமாக்க முடிவதில்லை. இதுவே திருமண பந்தம் பாலியல் தொழிலுக்கான தேவையை உருவாக்குகின்ற காரணங்கிளில் ஒன்றாகின்றது. இதனால்தான் திருமணம் என்பது பாலியல் தொழிலுடன் நேரடியாக தொடர்புபட்டது எனகின்றார் சீமோன் பேவோர் (Simone De Beauvoir)



பாலியல் செயற்பாடுகள் உறவுகள் தொடர்பாக சமூகத்தால் உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் (சுய) அடக்குமுறைகளும் அதனால் உருவான ஆணாதிக்க பார்வையிலான பாலியல் திரைப்படங்களும் (நீலப்படங்கள்) குறிப்பாக ஆண்களிடம் பல்வேறு விதமான ஆசைகள் கற்பனைகள் எதிர்பார்ப்புகள் என பலவற்றை உருவாக்கியுள்ளது. ஆகவே பொதுவாக ஆண்கள் இவற்றை தமது மனைவி துணைவி காதலி மூலம் பூர்த்தி செய்தற்கு முயற்சிப்பார்கள். ஆனால் மறுபுறம் மேற்குறிப்பிட்ட அதே சமூக கட்டுப்பாடுகளால் ஒரு பெண்ணினால் அவளது ஆணின் எதிர்பார்ப்புகளை ஆசைகளை கனவுகளை பூர்த்திசெய்யமுடியவதில்லை. ஏனனில் இக் கட்டுப்பாடுகளினால் பெண்களுக்கு பல்வேறுவிதமான மன உள உடல் பிரச்சனைகள் உருவாகியுள்ளதுடன் இவை அவர்களின் சுதந்திரமாக பாலியலுறவுகளுக்கு தடைகளாகவும் இருக்கின்றன. இதன் ஒரு காரணமாகவே ஆண்கள் திருமணத்திற்கு வெளியில் தமது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவற்காக பெண்களைத் தேட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இவ்வாறன ஒரு தேவையே பாலியல் தொழிலாளர்கள் உருவாவதற்கு வித்திட்டது என்கின்றார் சிமோன் பிவோர் (Simone Beauvoir) . இதைதான் யூடித் பட்லர் (Judith Butler) திருமன பந்தத்திற்குள் எது இல்லையோ அல்லது நீக்கப்பட்டுள்ளதோ அதை உள்வாங்கி உள்ளடக்கியதுதான் பாலியல் தொழில் என்கின்றார்.



திருமண பந்தத்திற்குள் இடம் பெறும் அடக்குமுறைகளையும் சுரண்டல்களையும் புரிந்த கொள்ளும் பெண்கள் தனியாக சென்று வாழும் பொழுது குறிப்பாக தெற்கு உலகம் எனக் கூறப்படுகின்ற வளர்கின்ற அல்லது வளராத நாடுகளில் உள்ள பெண்கள் இயல்பாகவே பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். வளர்ந்த நாடுகளான மேலைத்தேய நாடுகளில் தனித்து வாழும் பெண்களுக்கான சட்டங்களின் அடிப்படையிலான ஆதரவு இருந்தபோதும் பாலியல் தொழில் என வரும் பொழுது பல பிரச்சனைகளை இப் பெண்கள் எதிர்கொள்கின்றனர். மேலும் பாரம்பரிய பாலியல் தொழில் அமைப்புக்குள் ஒரு பெண் பல ஆண்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் இருக்கின்ற ஆணுக்கே அதிகாரம் இருக்கின்றது. ஏனனில் ஆண்களின் அதிகாரம் என்பது சகல வெளிகளிலும் (குடும்பம் சமூகம் அரசியல் வியாபாரம்) பரந்துள்ளது மட்டுமல்ல சமூகத்தால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருக்கின்றது. இந்த அதிகாரத்தினால் அவர்கள் பெண்களை பல்வேறு வழிகளில் சுரண்டுவது அடக்குவதும் பயன்படுத்துவதும் இலகுவாகவும் உள்ளது. இந்தக் காரணங்களின் அடிப்படையிலையே இதற்கான தீர்வுகளையும் நாம காண வேண்டும். இதற்கு மாறாக நமது கலாசரா பண்பாடுகளின் பாதிப்புகள் கட்டுப்பாடுகள் காரணமாவும் காமம் மற்றும் பாலியல் தொடர்பான நமது மட்டுப்படுத்தப்பட்ட அறிவின் அடிப்படையிலும் பாலியல் தொழிலை உடினயாக சமூகத்திலிருந்து ஒழிக்கவேண்டிய ஒன்றாக பார்ப்பது அவசரமானதும் தவறானதுமான ஒரு பார்வையே ஆகும். ஏனனில் ஒருவர் தான் விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபட விரும்புகிறார் எனின் அது அவரது அடிப்படை தனி மனித உரிமையாகும். அதற்கான பாதுகாப்பும் உரிமையும் தேவையான சட்டங்களும் சமூக அந்தஸ்தும் நமது சமூகங்களில் இருக்கவேண்டியது இன்றியமையாதது ஆகும்.





திருமண பந்தத்திற்குள் வாழும் பெண்களுக்கும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும் சில பொதுத் தன்மைகளும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இரு பெண்களுமே ஆண்களால் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனர். பெண்கள் திருமண அல்லது குடும்ப உறவில் இருப்பவர்களும் சரி பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றவர்களும் சரி ஒரே விதமாகவே ஆண்களால் உபசரிக்கப்படுகின்றனர். இந்த இரு இடங்களிலும் பெண்கள் அதிகாரம் இல்லாதவர்களாக மட்டுமல்ல சுரண்டலுக்கும் உட்படுத்தப்ட்டவரர்களாகவே இருக்கின்றனர். ஏனனில் இந்த் இரு வெளிகளிலும் பெண்கள் அடிமைகளாக, பயன்படுத்தப்படும் பொருட்களாக, உடமைகளாகவே பார்க்கப்படுகின்றனர். மேலும் பொருளாதார ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் இந்த இரு வெளிகளிலும் சுரண்டப்படுகின்றனர். இந்த இரு அமைபிற்குள்ளும் பெண்கள் தமது பாலியல் உணர்வுகளை அனுபவிப்பதோ அதனால் மகிழ்வதோ இல்லை என்பது கசப்பான ஒரு உண்மை. அதாவது லோர்ட் (Audre Lorde) என்ற பெண்ணியலாளர் குறிப்பிடுவது போன்று பெண்கள் எந்தவிதமான உணர்வுகளுமற்ற பிளாஸ்டிக் போன்ற உடலாகவே ஆண்களால் பார்க்கவும் அவ்வாறான கண்ணோட்டத்துடனையே பயன்படுத்தவும்படுகின்றனர். அதாவது பெண்கள் பாலியல் பண்டங்களாக ஆண்களின் பாலியல் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனர்.



திருமணத்திற்கும் பாலியல் தொழிலுக்குமான வேறுபாட்டை பீவோர் (Simone De Beauvoir) பின்வருமாறு கூறுகின்றார். அதாவது ஒரு ஆண்களின் பாலியல் தேவைகளை குறிப்பிட்ட நேரத்தில் பணத்தின் மூலம் நிறைவு செய்வது பாலியல் தொழில். மறுபுறம் சமூகத்தின் தேவைகள் திருமணபந்தம் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது என்கின்றார். இவேளை திருமணம் மற்றும் பாலியல் தொழில் என ஒவ்வொரு அமைப்புக்குள்ளும் பெண்களுக்கான நன்மைகளும் தீமைகளும் உண்டு. திருமணமான பெண்களை தமது சமூக அந்தஸ்திற்காகவும் மற்றும் வீட்டு வேலைகளை செய்வதற்காகவும் ஆண்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு திருமண பந்தத்திற்குள் பெண்கள் அடக்கப்ட்டு சுரண்டப்படட போதும் ஒரளவாவது மனிதர்களாக மதிக்கப்படுகின்றர். மேலும் சமூக அந்தஸ்து ஒரளவு பாதுகாப்பும் இருக்கின்றது. ஆண்கள் தமது பாலியல் காம ஆசைகளை எல்லாம் தமது மனைவி மூலம் பூர்த்தி செய்வதற்கு விரும்புவதில்லை. ஆண்களுக்கு அதிகாரம் பலம் இருந்தபோதும் தமது கலாசாரம் மற்றும் பண்பாடுகள் காரணமாக தமது மனைவியிடம் தமது ஆசைகளை கூறுவதற்கும் பங்கெடுக்குமாறு கேட்பதற்கும் தயக்கம் இருக்கின்றது. இது ஒரு முரண்நகையே. ஆனால் வீட்டிற்குள் பெண்கள் செய்யும் தொழிலுக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனால் பாலியல் தொழிலாளர்களுக்கு சமூக அந்தஸ்து இல்லாதபோதும் ஒரளவு சுதந்திரமான வாழ்க்கையும் வருமானமும் கிடைக்கின்றது.







பாலியல் தொழிலாளர்கள் தமது உடலையை மூலதனமாகக் பயன்படுத்தி இத் தொழிலில் ஈடுபடுகின்றனர். பல நாடுகளில் பாலியல் தொழில் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்டாமலே இருக்கின்றது. அதேநேரம் இத் தொழிலுக்கு சமூகத்தில் இருக்கின்ற தேவையினால் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு பெயர்களில் நடைபெறுகின்றது. இதானால் குறிப்பாக இத் தொழில் ஈடுபடும் பெண்கள் தமது தொழிலாளர் மற்றும் பெண்களது உரிமைகளை அனுபவிக்க முடியாது பல கஸ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். இதற்கு காரணம் இத் தொழிலுக்கான சட்ட அங்கீகாரம் இல்லாதது முதல் காரணம். மிக சில நாடுகளில் இது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்ட்ட போதும் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு இரண்டாவது காரணமாக இருப்பது இத் தொழிலுக்கான சமூக அந்தஸ்து இல்லாதது எனலாம். ஆகவே தான் சாதாரண பொது மனிதர்கள் குறிப்பாக ஆண்கள் இரகசிய வெளியில் இவர்களை பயன்படுத்துவதும் பரந்த பொது வெளியில் இவர்களைத் துன்புறுத்துவதும் அசிங்கப்படுத்துவதும சாதாரணமாக அனைத்து சமூகங்களிலும் நடைபெறுகின்றன. பாலியல் தொழிலின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஆண்களாக இருப்பதும் இவர்கள் பெண்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களைத் துன்புறுத்துவது பாலியல் சேட்டைகள் செய்வது மற்றும் வன்புணர்தலில் ஈடுபடுவதும் சர்வசாதரணமாக இருக்கின்றன. ஏனனில் பேராசிரியர் கால் ருபின் (Galle Rubin) கூற்றுப்படி, காமம் மற்றும் பாலியல் மற்றும் அதுதொடர்பான பழக்கவழக்கங்கள் என்பவற்றுக்கும் அவற்றுக்கே உரிய அரசியல் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளது. ஆகவேதான் பல சட்டங்கள் இவற்றுக்கு எதிராக இருக்கின்றன அல்லது இயற்றப்படுகின்றன என்கின்றார்;. இவ்வாறான சட்டங்கள் நமது நாளாந்த வாழ்வை பல காலமாக ஆட்சிசெய்து வருகின்றன. இதனால் மிகவும் பாதிப்படைகின்றவர்கள் குறிப்பாக பாலியல் தொழிலாளர்கள் ஆகவே பெண்கள் என்றால் மிகையல்ல. ஏனனில் இந்த சட்டங்களை மட்டுமல்ல பெரும்பாலான சட்டங்களை அதுவும் பெண்கள் தொடர்பான சட்டங்களையும் பெரும்பாலான நாடுகளில் இயற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர் என்கின்றார்.





பாலியல் தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் உள்ள காவல் துறையினரே பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக இவர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர். ஏனனில் பாலியல் தொழிலாளர்கள் பொது இடத்தில் நின்று தம்மை பணத்திற்காக விற்பனை செய்வது என்பது சட்டத்தை மீறும் ஒரு குற்றமாகின்றது. இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட சட்டங்கள் இத் தொழிலாளர்களை இம்சைக்குள்ளாக்குகின்றன. இவ்வாறு கைது செய்யப்படுகின்றவர்கள் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்;. ஆகவேதான் இவ்வாறான சட்டங்களை பேச்சு சுதந்தரத்திற்கு எதிரான சட்டங்கள் என பெண்ணியவாதிகளும், பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்கும் பாதுகாப்பிற்குமான அவர்களின் தொழிற் சங்கங்களும் வாதிடுகின்றனர். மேலும் இத் தொழில் ஒரு குற்றத் தொழிலாக கருதப்படக் கூடாது எனவும் போராடுகின்றனர். மேலும் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இவர்கள் தனியார் வியாபாரமாக பதிவு செய்து வரி கட்டுகின்றனர். ஆனால் பிற வரி கட்டும் தொழில்கள் போன்று இத் தொழிலுக்கான சட்ட சமூக பாதுகாப்பும் மதிப்பும் இல்லாதது சட்டத்தில் உள்ள குறைபாடு என்கின்றனர். மறுபுறம் இவ்வாறு சட்டரீதியாக பதிவது கூட இத் தொழிலாளர்களுக்கு பாதிப்பாக இருக்கின்றது. ஏனனில் இவர்ககளது சகல விபரங்களையும் காவல் துறையினர் பெற்றுக்கொண்டு இவர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகின்றனர். மறுபுறம் பாலியல் தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்ட்ட நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே நமது உடல் நலம் மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான விடயங்களை பரிசோதித்து சான்றீதழ்கள் பெறவேண்டும். ஆண் வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறன கட்டுப்பாடுகள் இல்லாமை இத் தொழில் தொடர்பான முன்னேறிய நாடுகள் எனக் கூறப்படுகின்ற அரசாங்கங்களின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகின்றது. சட்டரீதியாக அங்கீகரிக்கப்ட்ட நாடுகளிலையே நிலமை இப்படியாயின் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத நாடுகளில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமைமை கூறத்தேவையில்;லை.



இந்தியாவில் தமிழ் நாட்டில் 2000ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி 80வீதமான பெண் பாலியல் தொழிலாளர்கள் பொலிசாரால் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டும் 70விதமானவர்கள் சட்டத்திற்கு புறம்பானவகையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என இது தொடர்பாக ஆய்வு செய்த மீனா சரஸ்வதியும் (Meena Saraswathi Seshu) ஜோனன் சேசுவும் (Joanne Csete) குறிப்பிட்டுள்ளனர். பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் கூட பெரியளவில் உதவவில்லை என்கின்றனர் இவர்கள். இதற்கு காரணம் கட்டயாப்படுத்தப்பட்ட (forced) மற்றும் கட்டாயப்படுத்தப்படாத (unforced) பாலியல் தொழிலுக்கு இடையிலான வித்தியாசத்தை வரையறுக்காமையும் ஒரு காரணமாக இருக்கின்றது என்கின்றனர். இதானால் பாலியல் தொழிலாளர்களால் முன்வைக்கப்படுகின்ற மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தட்டிக்கழிக்கப்படுகின்றன எனக்கின்றார்கள்.



இதனால்தான் பாலியல் தொழிலாளர்களின் உரிமை என்பது பெண்களின் உரிமைகளின் ஒரு பகுதி எனவும் ஆகவே அடிப்படை மனித உரிமை எனவும் கூறுகின்றார் லொர்ட் (Audre Lorde). ஆகவே பெண்ணுரிமையாளர்கள் தமது வேறுபாடுகளைக் கடந்து பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என அழைக்கின்றார். ஆனால் ஆண்கள் பெண்ணுரிமைகளுக்கு எதிராக இருப்பதற்கு காரணம் இருக்கின்றது. ஏனனில் ஆண்கள் பெண்களில் தங்கியிருப்பதுடன், தமக்கு வேண்டிய நேரம் தாம் விரும்பிய படி பெண்களின் உடலைப் பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் பெண்ணுரிமைக் போராட்டங்கள் மூலம் பெண்கள் தம் சொந்த உடல் மீதான அதிகாரத்தை மீளப் பெற்றுவிடுவார்கள் என்ற பயம் ஆண்களுக்கு உள்ளது என்கின்றார் மார்லின் பிரை (Marilyn Frye). இவர் இதை மேலும் விளக்கிக் கூறுகின்றார். அதாவது ஒருவரிடம் இருக்கின்றன முழுமையான அதிகாரம் என்பது எந்தவிதமான தடையுமற்று ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஒன்றை முழுமையாக அனுபவிக்கலாம். மறுபுறம் முழுமையான அதிகாரம் ஒருவரிடம் இல்லாமை என்பது எந்தத் தடையுமின்றி மற்றுவர் பெற்றுக் கொள்ளும் அல்லது முழுமையாக அனுபவிக்கும் வகையில் இருப்பது என்கின்றார். குறிப்பாக பாலியல் தொழிலாளி ஒருவர் உரிமைகள் மற்றும் அதிகாரம் கொண்டிருப்பதை எந்த ஒரு ஆணும் விரும்புவதில்லை. ஏனனில் முதலாவது காரணம் பாலியல் தொழிலாளி ஒருவர் ஒரு ஆண் விரும்புவதை அல்லது கேட்கின்றதை மறுகின்றமையை அவரால் சகிக்க முடியாமலிருப்பார். இரண்டாவது காரணம், தான் விரும்பிய எல்லாவற்றையும் பெறவோ செய்யவோ முடியாமலிருப்பதற்கான தடையாக உணர்கின்றமை. அதாவது ஒரு பாலியல் தொழிலாளிக்கு, ஒரு வாடிக்கையாளரின் கோரிக்கைகளை மறுக்கும் உரிமை மறுக்கப்படுவதையே வாடிக்கையாளர்களான பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.





தந்தைவழி ஆணாதிக்க சமூகமும் இருபாலுறவு ஒரு தரா மண உறவு முறையும் இதன் அடிப்படையிலான பாலியலறிவும் நம்மிடம் இருக்கும் வரை பாலியல் தொழிலும் பெண்களுக்கு எதிரான பொருளாதார பாலியல் சுரண்டலும் அடக்குமுறையும் இருந்தே தீரும். இதிலிருந்து விடுபட சமூக அமைப்பு முறைமைகள் பொருளாதார சமூக உறவுகள் என்பவற்றை மட்டுமல்ல சமூக மேலாதிக்க சித்தாந்தத்தை கருத்தாதிக்கத்தையும் பிரக்ஞைபூர்வமாக மாற்றவேண்டிய தேவையுள்ளது. காமமும் பாலியலுறவுகளும் மறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு அடக்கப்பட்டிருக்கின்ற இவ்வாறான சமூகத்தில், பாலியல் தொழில் என்பது ஆண்களுக்காக பெண்கள் செய்கின்றன ஒரு சேவையே. பாலியல் தொழில் செய்வது பாலியல் தொழிலாளர்களது குறிப்பாக பெண்களது தவறு அல்ல. ஏனனில் சமூகத்தில் அதற்கான தேவை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே பாலியல் தொழிலாளர்கள் தமது சொந்த விருப்பத்தினால் அல்லது சந்தர்ப்பவசத்தால் அல்லது நிர்ப்பந்தந்தால் இந்த தேவையை தமது பாலியல் உறுப்புக்களைப் பயன்படுத்தி ஒரு வேலையாக அல்லது சேவையாக நிறைவேற்றுகின்றனர். இத் தொழிலில் மட்டுமல்ல பல்வேறு தொழில்களிலும் இவ்வாறு மனிதர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் அவர்களது விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு குறிப்பிட்ட சில தொழில்களை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதுடன் சுரண்டலுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். அவ்வாறான தொழில்களில் இருந்து இந்த பாலியல் தொழிலை நாம் வேறுபடுத்தி பார்ப்பதற்கும் இது தொழிலே இல்லை என சிலர் வாதிடுவதற்கு நமது காமம் மற்றும் பாலியல் தொடர்பான மட்டுமடுத்தப்பட்ட அறிவும் மற்றும் சமூகங்களால் காலம் காலமாக வழங்கப்பட்ட அறிவே காரணமாகின்றது.



முதலில் காமம் ஒரு பாவம் என்ற நமது நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இரண்டாவது இது ஒரு இயற்கையான உணர்வு செய்ற்பாடு என்பதை ஏற்கவேண்டும். மூன்றாவது பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கரிப்பதுடன் அத் தொழிலை ஒருவர் விரும்பி அல்லது வேறு ஒரு காரணத்திற்காக செய்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சமூக சட்ட ரீதியான பாதுகாப்புகள் வழங்கப்படவேண்டும். இத் தொழில் குற்றமற்றது எனவும் பாலியல் தொழிலாளர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் சட்டங்கள் இயற்றப்படவேண்டும். நான்காவது இத் தொழிலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டு ஈடுபடுத்தப்படுவதை நிறுத்துவதற்கு தகுந்த வழிமுறைகள் ஒவ்வொரு அரசாங்கங்களும் காணவேண்டும். மேலும் காமம் பாலியல் போன்ற தொடர்பான நமது நம்பிக்கைகள் அறிவுகள் பழக்கவழக்கங்கள் செயற்பாடுகள் என்பன கேள்விக்குட்படுத்தப்பட்டு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்படவேண்டும். ஏனனில் அன்று லோர்ட் (Audre Lorde) காமத்தை அடக்கியதால் மனிதர்கள் தமது காமம் தொடர்பான உணர்வுகளையும் அது தொடர்பான பிரக்ஞையையும் இழந்துள்ளனர் என்கின்றார்.



நாம் ஆணாதிக்க கருத்தியல்களுக்கும் சித்தாந்த மேலாதிக்கங்களுக்கும் அதன் நிறுவனங்களுக்கு எதிராக எழுதியோ போராடிய போதும் நமக்குள் இன்னும் இந்த ஆணாதிக்கத்தின் கூறுகள் வேர்கள் இருக்கின்றன. துரதிர்ஸ்டவசமாக இவற்றை நமது நாளாந்த வாழ்வில் சிந்தனையில் பிரித்தறிய முடியாதளவு பிரக்ஞையற்றவர்களாக இருக்கின்றோம். லோர்ட் (Audre Lorde) மேலும் கூறும் பொழுது நமக்குள் ஆழமாக பதிந்திருக்கும் இவற்றை வேருடன் பிடிங்கி எறிவது மட்டுமல்ல, இது தொடர்பான நமது தேடல்கள் காமத்தை ஆரோக்கியமான படைப்பாற்றலாக மட்டுமல்ல மனித மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்கின்றார். இவ்வாறான சமூக மாற்றம் என்பது மேலோட்டமானதாக இருக்காது மாறாக ஆழமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.



இக் கட்டுரை சமூகத்தின் பொதுவான போக்கையே கூறுகின்றது. விதிவிலக்கான ஆண்கள் பெண்கள் இருக்கின்றனர் என்பது உண்மையானபோதும் இவ்வாறன விதிவில்கான மனிதர்கள் விகிதாசாரத்தில் மிக அரிதாகவே உள்ளனர். ஆகவே விதிவிலக்கான ஆண்களே நீங்கள் இதை ஒரு சமூகப் பிரச்சனையாகவே பாருங்கள். மேலும் நீங்கள் திருமணம் முடித்தவராயின் தங்களது மனைவி துணைவி காதலியுடனான பாலியல் உறவு தொடர்பான தங்களது பண்புத் தன்மையை கவனியுங்கள். இதில் எல்லாம் நீங்கள் நியாயமாக இருக்கின்றீர்pகள் எனக் கருதுவீர்களாயின் இக் கட்டுரை தங்களுக்குப் பொருத்தமில்லாததாக இருக்காலம். ஆனால் நான் ஒரு ஆணாகவும் பெண்ணிலைவாதியாக இருப்பதற்கும் முயற்சிப்பதாலும், எனது பிரக்ஞைக்கும் பிரக்ஞையின்மைக்கும் இடையில் மாறி மாறி வாழ்வதாலும், எனக்குளிருக்கின்ற ஆணாதிக்க தன்மையின் பல பண்புகளை அவ்வப்போது புரிந்துகொள்கின்றேன். புரிந்துகொள்ள முடியாத சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. ஆனாலும் இக் கட்டுரையை ஒரளவு பிரக்ஞையுடன் வெளியாளாக நின்றே எழுதியுள்ளேன் என்பதை குறிப்பிடுவது முக்கியமானது எனக் கருதுகின்றேன்.



மீராபாரதி

(பெண்மையும் ஆண்மையும்)





ஊசாத்துணை நூல்கள்

Audre Lorde. The uses of the Erotic: The Erotic as Power. The lesbian and gay studies reader.



Audre Lorde. (1984). “Age, Race, Class and Sex: Women Redefining Difference”. Sister

Outside: Essays and Speeches. Crossing Press.



Galle Rubin. (1984). “Thinking Sex: Notes for a Radical Theory of the Politics of Sexuality”.

Pleasure and Danger: Exploring Female Sexuality. Ed. Carole Vance, Boston:

Routledge and Kegan.



Joanne Csete, Meena Saraswathi Seshu. HIV/AIDS Policy & Law Review; Dec2004, Vol. 9 Issue 3, p1-13, 7p





Judith Butler. Gender as Performance: An interview with Judith Butler. Radical Philosophy. ,



Marilyn Frye . (1993). “Some Reflections on Separatism and Power”. The Lesbian and Gay

Studies Reader. Ed. Henry Abelove et al. Routledge



Simone De Beauvoir. Prostitutes and Hetairas. The second sex



Shan E. Chain. Feeling Her Way:Audre Lorde and the power of Touch. Eds. Bonnie G. Smith and Beth

Hutchison. Gendering Disability



மேலதிக தகவல்களுக்கு பாலியல் தொழிலாளர்களுக்கான வலைத்தள இணைப்புகள்

http://www.durbar.org/

http://www.bayswan.org/





http://www.maggiestoronto.com/info.html



http://www.swopusa.org/dec17/



http://www.swopusa.org/March3/



http://www.nswp.org/





http://www.iusw.org/

1 comment:

meerabharathy said...

The feminist and the sex worker: Lessons from the Indian experience
By: Srilatha Batliwala


From the earliest days of ‘second wave’ feminism, the issues of choice and consent have been central to feminist thought throughout the world. Much of early feminist analysis focused on how patriarchies manifested themselves in terms of male control over women’s lives: their sexuality and reproduction, their mobility, their work, employment and assets, and their access to and participation in the public realm. This control not only constricted the range of women’s choices, but often denied their right to make choices at all. The issue of consent was fraught with far greater political complexity, and viewed by many feminists with some suspicion, since it was widely used by anti-feminist and religious ideologues to justify gender discrimination. Feminist thinking on consent – connoting acquiescence, willing acceptance or even active support – therefore appeared more often in the context of women’s ‘false consciousness’, as a manifestation of women’s co-option into maintaining patriarchal rule. In terms of both choice and consent, few issues have been more rigorously debated in recent decades than that of sex work; but today, it seems that feminism itself has quite a bit to learn from sex workers.

http://www.himalmag.com/The-feminist-and-the-sex-worker-Lessons-from-the-Indian-experience_nw4623.html