Saturday, May 14, 2011

பெண்; விடுதலை! ஒரு புதிய பார்வை…பாதை…

பெண் விடுதலை சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வு இன்றைய உலகில் அதிகரித்துவருவது முன்னேற்றமான விடயம். குறிப்பாக ஆண்களும் கடந்தகால ஆண்மைத் தன்மையின் இயல்புகளின் தவறுகளையும் அதன் பெண்ணீய எதிர்ப்புணர்வையும் புரிந்து கொள்ளவும் அதிலிருந்து விடுபடவும் முயற்சிக்கும் முக்கியமான காலகட்டம் இது. ஆகவே சமூக அரசியல் தளங்களில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும்; பெண்கள் பெண்ணீயம் தொடர்பான தமது நிலைப்பாட்டை முன்வைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. காரணம் கடந்தகாலங்களில் சமய நிறுவனங்கள் பெண்ணை பெண்மையை அடக்கி ஒடுக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பது வெளிப்படையான உண்மை.
சமய நிறுவனங்களிலிருந்து ஆன்மிக செயற்பாட்டை பிரித்து எடுத்து தனித்து நிறுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். ஏனனில் ஆன்மீகம் தனிநபர் சுதந்திரம் விடுதலை தனித்தன்மை சார்ந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பாதை இது. ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

உண்மையில் பெண்ணீய பிரச்சனை என்பது தவறான ஒரு ஆரம்பம்.
பிரச்சனை ஆண்களினதே. அவர்களது மன உளவியல் சார்ந்த தாழ்வுச்சிக்கலில் உருவானதே பெண் அடிமைத்தனம். ஆகவே அவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இவர்கள் குணமடையும் பொழுது பெண்களைப் புரிந்துகொள்வார்கள். மதிப்பார்கள். பெண்கள் தம் இயல்பை பெண்மையை பற்றி பெருமை கொள்ள வேண்டும். ஆணாதிக்கம் விதைத்த பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தம் ஆழ் மனங்களிலிருந்து வேரோடு வெட்டி எறியவேண்டும்.

பெண்மையின் சக்தி கண்டு பயந்த ஆரம்ப கால மனிதர் பெண்மையின் இயல்புகளை பண்புகளை குற்றம் கூறி குறை கண்டனர். அதனை வெளிப்படுத்தாதவாறு வரைமுறைகளை அமைத்து அடக்கினர். மீறி வெளிப்படுத்தியவர்களை பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டித்தனர், தண்டித்தனர். கீழ்தரமாகவும் தாழ்நிலையிலும் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட
னர். இது பெண்களின் இரத்தத்திலும் எலும்புகளிலும் நன்றாக ஊடுருவியுள்ளது. ஆண்களின் குறிப்பாக ஆண்தன்மையின் இயல்புகளும் பண்புகளும் பெண்களினதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஆண்களால் முடியாத ஒன்று பெண்களால் முடியும் என்பது ஆண்களிடம் தாம் அவர்களைவிட குறைந்தவர்கள் என்ற தாழ்வுச் சிக்கலையும் இயலாமை உணர்வையும் உருவாக்கிவிட்டது. குறிப்பாக பெண்கள் குழந்தைகளைப் பெறுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட காம இன்ப (orgasm) உணர்வை அடுத்தடுத்து இயல்பாகப் பெறுவதும் ஆண்களால் முடியாத ஒன்று. இதுவும் ஆண்களிடம் தாழ்வுச்சிக்கலை உருவாக்கியது. தாம் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கு பெண்களை தம் உடலற்பலம் கொண்டு அடக்குவதையும் அவர்களது பண்புகளையும் இயல்புகளையும் சட்டங்கள் இயற்றிக் கண்டித்தனர். இவ்வாறு மிகப் பலமாக இருந்த பெண்ணை பெண்மையை பல்லாயிரம் ஆண்டுகளாக “பெண் பலகீனமானவள்”எனக் கூறி பெண்ணினது அடி மன ஆழத்தில் இக் கருத்தியலைப் புதைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல ஆயிரம் பெண்கள் பேரின்பத்தின் ஒரு பகுதியான சிற்றின்பம் (orgasm) என்ன என்பது தெரியாமலே தாமும் அதற்கு தகுதியானவர்கள் அனுபவிக்கக் கூடியவர்கள் என்பதை அறியாமல் வாழ்ந்து இறந்திருக்கின்றனர். ஆண்களால் தொடர்ச்சியாக இன்பத்தை வழங்க முடியாததாலும், பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) என்னவென்று தெரியுமாயின் ஆணால் ஒரு முறைகூட பெண்ணை திருப்தி செய்யமுடியாது என்பதை பெண் கண்டு பிடித்துவிடுவாள் என்பதாலும் பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) கிடைக்காதவாறு அது என்னவென்று அறிய முடியாதவாறு பெண்களை அடக்கி ஒடுக்கினர். தடைகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கினர் ஆண்கள்.

இந்த நூற்றாண்டிலையே காம புணர்வில் இருக்கும் பொழுது உருவாகும் குறிப்பான இன்பம் (orgasm) அடையாளங் காணப்பட்டது. இந்த இன்பம் தொடர்பாக கிழக்கிலோ மேற்கிலோ எந்தவிதமான பாலியல் நூல்களிலும் அதுவரை குறிப்பிடவில்லை. இது மிகவும் முரண்பாடானது.

ஆண்களுக்கு பெண்கள் என்றும் கவர்ச்சியாக இருக்கின்றனர். அழகாகவும் இருக்கின்றனர். ஆகவே பெண்களிடம் காதலில் விழுகின்றனர். பெண் ஆணிண் போதையாகின்றாள். இங்கு மேலும்; பிரச்சனை ஆரம்பிக்கின்றது. பெண்களிடம் தாம் தங்கியிருக்கின்றோம் என்பது ஆணால் சகிக்கமுடியாததாக ஏற்றுக்கொள்ள முடியாததாக மனதைத் துன்புறுத்துகின்றது. ஆண்களின் இந்த உணர்வானது பெண்களை மேலும் அடிமைப் படுத்துவதற்கு வழிகோலியது. மேலும் பெண் அழகாக இருப்பது ஆணுக்கு மேலும் பயத்தை அதிகரித்தது. காரணம் ஒரு ஆணுக்கு மட்டும் பெண் அழகாக இருக்கமுடியாது அவளைப் பார்க்கும் எல்லா ஆண்களுக்கும் அவள் அழகாக இருப்பாள். இது அவளுடன் தொடர்பு கொள்ளவும் உறவை ஏற்படுத்தவும் வழியமைக்கின்றது. ஆணாதிக்க மனதில் அவனது தன்முனைப்புக்கு இது பெரும் சவாலான பிரச்சனையாக இருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான போக்கு அடக்குமுறை நாடுகளுக்கு தேசங்களுக்கு பண்பாடுகளுக்கு கலாசாரங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் பொதுவானதாக இருந்திருக்கின்றது. ஏனனில் உலகில் உள்ள அனைத்து ஆண்களின் மனோபாவம் தான் பெரியவன் பலசாலி புத்திசாலி திறமைசாலி என தன் தாழ்வுச்சிக்கலால் நிறுபிக்க வேண்டிய உறுதி செய்யவேண்டிய மனப்பான்மை இருக்கின்றது. நாம் ஒன்றை நிறுபிக்க முற்படுகின்றோமாயின் நாம் அவ்வாறு இல்லை என்பதானால் தான். உண்மையிலையே உயர்ந்தவருக்கு தன்னை நிறுபிக்கவேண்டிய தேவையில்லை. சாட்சிகளோ காரணங்களோ தேவையில்லை. ஒருவர் எல்லாவற்றிலும் உயர்ந்தவரர் எனின் குறைந்த புத்தியுள்ளவரால் கூட அடையாளம் காணமுடியும். ஏனனில் அவரிடம் அந்த காந்த சக்தி இருக்கும். பெண்ணை கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்காக பெண்ணை ஒரு உப மனித இனமாகவே ஆண் அடையாளப்படுத்தினான். தனக்கு சரிசமமானவள் எனக் கருதியதில்லை.

இயற்கை மிகவும் சக்திவாய்ந்தது. புத்திக் கூர்மையானது.(intelligent) இதனால் தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வௌ;வேறு பண்புகளையும் இயல்புகளையும் படைத்துள்ளது. ஓவ்வொரு பண்புக்கும் இயல்புகளுக்கும் ஒவ்வொருவிதமான பொறுப்புக்கள் வாழ்க்கையில் உண்டு. எந்த ஒரு இயல்போ பண்போ ஒன்றைவிட ஒன்று குறைந்ததுமல்ல கூடியதுமல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி. இதைப் புரிந்துகொண்டு நம் பணிகளையும் பொறுப்புக்களையும் முழுமையுடன் செய்யும் பொழுது வாழ்வு மட்டுமல்ல ஒவ்வொரு கணமும் நிறைவு பெற்று ஆனந்த மயமாக இருக்கின்றது. ஆணுக்கு நிகராய் பெண்ணும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் பங்குபெற வேண்டும். ஆண்கள் (ஆண் தன்மை போக்கு) மட்டும் பங்கு பெறுவதனாலையே யுத்தங்களும் ஆயுதப் போராட்டங்களும் பயங்கரவாத பூச்சாண்டிகளும் ஆயுத உற்பத்திகளும் நடைபெறுகின்றன. வாழ்க்கiயில் அழகியல் என்பது பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமே உரித்தானதாகிவிட்டது.

பெண் விடுதலை முன்னணி உருவாக்கப்பட வேண்டும் ஆனால் அது எதிர்ப்புணர்வின் அடிப்படையிலோ கோவத்திலோ வெறுப்பிலோ உருவானதாக இருக்கக்கூடாது. மாறாக புரிந்துணர்வின் அடிப்படையிலும் அன்பு காதல் என்பவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.இன்றைய பெண்விடுதலைப் போராட்டம் பிரங்க்ஞையற்ற ஆண்களுக்கு எதிரானதாக எதிர்விளைவாகவே இருக்கின்றது. இது மாறவேண்டும். கடந்த காலங்களிலிருந்து அடக்கியாளும் ஆண்கள் தாம் என்ன செய்கின்றோம் என்ற சுய பிரங்க்ஞை இன்றியே பெண்களைக் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களது மனதில் வேருண்டப்பட்ட கருத்துக்களில் இருந்தே செயற்பட்டனர். நாம் புரட்சி செய்ய வேண்டியது கடந்த காலத்திற்கு,! கடந்தகால ஆதிக்கத்திற்கு எதிராகவே! ஆணாதிக்க கருத்தியலுக்கு எதிராகவே! போராட்டம் நடைபெறவேண்டும்.

ஆண்கள் களைத்து தோற்றுப்போனார்கள்!
கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் ஐயாயிரம் யுத்தங்களை நடாத்தியிருக்கின்றார்கள். இரண்டு யுத்தங்களுக்கு இடையிலான காலமே அமைதியான சமாதான நாட்கள். உண்மையாக இவை அடுத்த யுத்தத்திற்கான தயாரிப்பு நாட்களே. ஆண்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் போதும்.

இனிவரும் காலம் பெண்களின் காலம் என்பதே என் பார்வை. இது பெண்களுக்கான சந்தர்ப்பம். பெண்மையின் சக்தி செயற்பட இனி சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
பெண் தன்மையின் அடிப்படையில் பெண்கள் இயங்கவேண்டும். இதுவே எதிர்காலத்திற்கு நம்பிக்யையையம் ஒளியும் வழியும் தரும் என ஓசோ கூறுகின்றார்.


ஓசோவின் பெண் விடுதலை! புதிய பார்வை என்ற புத்தகம் மேலும் பல விரிவான விளக்கங்களைத் தருகின்றது

No comments: